மொட்டை போட்ட பெண் போலீஸ் 
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்காக மொட்டை போட்ட பெண் போலீஸ்- அனுஷ்கா சர்மா பாராட்டு

கேரளாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு தானம் அளிக்க மொட்டை போட்ட பெண் போலீசுக்கு இந்தி நடிகை அனுஷ்கா ‌ஷர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை:

பெண்கள் பலரும் தலைமுடியை அழகிற்காக வளர்க்கும் சூழலில், கேரளாவை சேர்ந்த சீனியர் சிவில் போலீஸ் அதிகாரி அபர்ணா லவகுமார் (வயது 46) தனது தலைமுடியை ஒரு நல்ல செயலுக்காக பயன்படுத்த தீர்மானித்தார்.

புற்றுநோய் காரணமாக தலைமுடியை இழந்து தவிக்கும் புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்க உதவும் வகையில், அபர்ணா தனது தலைமுடியை முழுக்க மழித்து கொண்டுள்ளார்.

கால் வரை நீளமாக இருந்த அவரது தலைமுடியை தானமாக அளிப்பதன் மூலமாக, புற்றுநோயாளிகளுக்கு பலன் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கீமோதெரபி சிகிச்சைக்குப் பின் தலைமுடி இழந்து வாழ நேரிடும் புற்றுநோயாளிகளை பார்த்து இந்த உதவி செய்ய தீர்மானித்ததாக, அபர்ணா தெரிவித்தார்.

திரிசூரில் உள்ள இரிஞ்சலகுடா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் அபர்ணாவுக்கு தற்போது பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இந்தி நடிகை அனுஷ்கா ‌ஷர்மா அபர்ணாவை பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார்.