டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் அமனாதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வால் தாக்கியதாக புகார் எழுந்தது.
தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை ஆளுநரைச் சந்தித்து புகாரளித்தார். இதனை அடுத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ் ஜார்வா, அமனாதுல்லா கானை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசார், பாட்டியாலா கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
இதையடுத்து குற்றப்பத்திரிகை விவரங்களை ஊடகங்களுக்கு காவல்துறை தெரிவிப்பதை தடுக்கக் கோரி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாட்டியாலா கோர்ட்டில் தனியாக மனு தாக்கல் செய்தனர்.