செய்திகள்

அரியானாவில் அதிர்ச்சி - மீண்டும் ஒரு பெண் கடத்தி பாலியல் பலாத்காரம்

அரியானாவின் ரேவாரி பகுதியில் மீண்டும் ஒரு பெண்ணை இரண்டு பேர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Rewari #RewariGangRape

மாலை மலர்

சண்டிகர்:

அரியானா மாநிலத்தின் மகேந்திரகர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள ரேவாரி பகுதியில் கடந்த புதன்கிழமை 19 வயதான மாணவியை ஒரு கும்பல் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றது.

மாணவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதே ரேவாரி பகுதியை சேர்ந்த ஒரு விதவை பெண்ணை இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேவாரி நகரில் உள்ள ஜுலானா பகுதியை சேர்ந்த விதவை பெண் ஒருவர் மருந்து பொருள்களை வாங்கிக் கொண்டு கடையில் இருந்து திரும்பினார்.

அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர் அவரது உடல் நிலை குறித்து விசாரிப்பது போல், அவரை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அருகிலுள்ள ஜிந்த் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரத்துக்குள் ரேவாரி பகுதியில் நடைபெற்றுள்ள இரண்டாவது பலாத்கார சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Rewari #RewariGangRape