செய்திகள்

ரூ.9 கோடி கடன் மோசடி: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் மீது மேலும் ஒரு வழக்கு

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் மேலும் ரூ.9.09 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக வங்கி அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். #NiravModi #PNBScam

புதுடெல்லி:

மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்களான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளை மூலம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி (ஓய்வு), மனோஜ் காரத் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதே வங்கி கிளை மூலம் மேலும் ஒரு கடன் மோசடி நடந்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதன்படி ‘சந்திரி பேப்பர்ஸ்’ என்ற நிறுவனம் இந்த வங்கி கிளையில் இருந்து கடன் ஒப்புதல் கடிதங்கள் (எல்.ஓ.யு.) பெற்றுக்கொண்டு ரூ.9.09 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த கடிதங்களையும் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத் ஆகிய இருவருமே வழங்கி உள்ளனர். எனவே அவர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். அத்துடன் சந்திரி பேப்பர்ஸ் நிறுவன அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.  #NiravModi #PNBScam #tamilnews

SCROLL FOR NEXT