கைது 
செய்திகள்

வேலூரில் அரிசி வியாபாரியை தாக்கி பணம் பறித்த மேலும் ஒருவர் கைது

வேலூரில் அரிசி வியாபாரியை தாக்கி பணம் பறித்த மேலும் ஒருவரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.

வேலூர்:

ஆரணி அடுத்த களம்பூரை சேர்ந்தவர் கோதண்டராமன் (வயது 49). அரிசி வியாபாரி. இவர் திருவண்ணாமலை, வேலூரில் உள்ள கடைகளுக்கு அரிசி வினியோகம் செய்து, அதற்கான பணத்தை வசூலித்து செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த 4-ந் தேதி வேலூர் வந்த கோண்டராமன் வேலப்பாடி பகுதியில் அரிசி வினியோகித்த வியாபாரிகளிடம் வசூலித்த ரூ.2 லட்சத்தை ஒரு கைப்பையில் வைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென கோதண்டராமனிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து அவர் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த சேகர் (30), ஸ்ரீதரன் உள்பட 4 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சேகரை போலீசார் கடந்த 10-ந் தேதி கைது செய்தனர். இந்த நிலையில் வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதரன் (28) கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.