ஜம்மு:
ஜம்மு நகரின் புறநகர்ப் பகுதியான கென்னி என்ற இடத்தில் சஞ்சுவான் ராணுவ முகாம் உள்ளது. அங்கு நேற்று அதிகாலையில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ராணுவ அதிகாரியின் மகள் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒரு ராணுவ வீரர் காயமடைந்ததாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, அங்குலம் அங்குலமாக தேடும் பணி நடந்தது. 27 மணி நேரம் நடத்த இந்த ஆபரேஷனில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில், மேலும், 3 ராணுவ அதிகாரிகள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், ஒரு சிவிலியன் உள்பட இதுவரை மொத்தம் 6 பேர் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். ராணுவம் மிக கவனமாக தீவிரவாதிகளை தேடி வருகின்றது. இதில், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவிட கூடாது என்பதில் முழு கவனம் செலுத்தியுள்ளதாக துணை டி.ஜி.பி தெரிவித்துள்ளார். #SunjwanArmyCamp #SunjwanAttack #TamilNews