சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளில் மறுமதிப்பீடு மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு முன்னாள் அதிகாரி ஜி.வி.உமா மற்றும் 10 பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும், தற்போதைய பேராசிரியையுமான ஜி.வி.உமா முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பான நடைமுறை நேர்மையாகவும், வெளிப்படை தன்மையாகவும் நடத்தப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே தனக்கு முன்ஜாமீன் மனு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. #AnnaUniversity #RevaluationScam