சென்னை:
சென்னை அண்ணாசாலையில் உள்ள புகாரி ஓட்டல் முன்பு நேற்று இரவு 11 மணி அளவில் 6 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அவர்களில் ஒருவரை குண்டு கட்டாக காரில் தூக்கி போட்டு கடத்தினர். இதுபற்றி அங்கிருந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக திருவல்லிக்கேணி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். துணை கமிஷனர் தர்மராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடத்தல்கார் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நின்று கொண்டிருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் காரில் இருந்தவரை கேட்க முயன்றனர்.
அப்போது கடத்தல் கும்பல் திடீரென இன்ஸ்பெக்டர் மோகன்தாசிடம் தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சுதாரித்துக் கொண்டு கடத்தல் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 5 பேர் போலீசில் சிக்கினர். அவர்களை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய போதுதான் கடத்தப்பட்டது சென்னை தொழில் அதிபர் என்பதும், ரூ.10 லட்சம் கடன் தகராறில் கடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
ராயப்பேட்டை செல்ல பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பைசுதீன். தொழில் அதிபரான இவர் ஹெல்மெட் கடைகளை நடத்தி வருகிறார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு மதுரை தாகூர் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜா உசேன் என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.
இதுதொடர்பாக ராஜா உசேனுக்கும், தொழில் அதிபர் பைசுதீனுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. ராஜா உசேன் மீது கடந்த 1995-ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கு உள்ளது.
இந்த வழக்கில் ஆஜர் ஆவதற்காக ராஜா உசேன் நேற்று சென்னை வந்துள்ளார். பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு நேற்று இரவு அண்ணாசாலை புகாரி ஓட்டல் அருகே பைசுதீனை, ராஜா உசேன் வர சொல்லி உள்ளார். அங்கு வைத்து பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதற்கு பைசுதீன், கால அவகாசம் கேட்டுள்ளார்.
இதன் காரணமாகவே பைசுதீனுக்கும், ராஜா உசேனுக்கும் அண்ணாசாலையில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த முகமது ராஜா உசேனின் மகன் முகமது சைபுல்லா, தொழில் அதிபர் பைசுதீனை அடித்து காரில் ஏற்றி கடத்தியுள்ளார்.
இதையடுத்து ராஜா உசேன், அவரது மகன் சைபுல்லா, திருச்சியை சேர்ந்த ரகமதுல்லா, ஆசீப்கான், தவுபீக் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் அனைவர் மீதும் கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், தாக்குதல், கடத்தல் உள்ளிட்ட 7 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா சாலை பகுதியில் ரவுடிகள் மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த பரபரப்பு சற்று அடங்கிய நிலையில் நேற்று இரவு அரங்கேறிய இந்த கடத்தல் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.