செய்திகள்

மார்ச் 23 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே மீண்டும் போர்க்கோலம்

வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக்கோரி மார்ச் 23 முதல் தலைநகர் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை அன்னா ஹசாரே மீண்டும் தொடங்குகிறார்.

மாலை மலர்

பெங்களூரு:

காந்தியவாதியும், சமூக ஆர்வலரும், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டம் தேவை என வலியுறுத்தி வருபவருமான அன்னா ஹசாரே கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆசிய கண்டத்தில் ஊழலில் முதல் நாடாக இந்தியாவை பிரபல போர்ப்ஸ் பத்திரிகை பட்டியலிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஹசாரே, தங்களது விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் கடந்த 22 ஆண்டுகளில் 12 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், அன்றாடம் இருவேளை உணவு கிடைப்பதற்காக விவசாயிகள் அவதிப்படுகின்றனர். 60 வயதை கடந்த விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது தற்போதைய முக்கிய தேவையாக உள்ள நிலையில், விவசாயிகள் ஓய்வூதிய மசோதா பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். இதுதொடர்பாகவும், விவசாயிகள் ஓய்வூதிய மசோதாவுக்காகவும் பிரதமர் மோடிக்கு இருபதுக்கும் அதிகமான கடிதங்களை நான் எழுதியுள்ளேன். ஆனால், நான் பரதேசி போல் தெரிவதால் பிரதமரின் ‘ஈகோ’ எனக்கு அவர் பதில் எழுதாமல் தடுத்திருக்கும் என்று கருதுகிறேன்.

எனவே, வலுவான லோக்பால் மசோதா தொடர்பாகவும், விவசாயிகளின் நலன்களை முன்வைத்தும் போராட்டம் நடத்துவதற்காக டெல்லியில் இடம் ஒதுக்கி தருமாறு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால், இதுவரை பதில் கிடைக்கவில்லை.

நாட்டு மக்களிடையே எனது இயக்கம் தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கவும், மக்களின் ஆதரவு வேண்டியும் கடந்த ஒருமாத காலத்தில் ஒடிசா, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், அசாம், அருணாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பிரசார பயணம் மேற்கொண்டேன். இன்னும் இரு மாதங்களுக்குள் மற்ற மாநிலங்களிலும் பயணம் மேற்கொள்வேன்.

வலுவான லோக்பால் மசோதா தொடர்பாகவும், விவசாயிகளின் நலன்களை முன்வைத்தும், தேர்தல் சட்டத்தை சீர்திருத்தவும் மாவீரர்கள் தினமான வரும் 23-ம் தேதி டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி, தொடர்ந்து போராடுவேன். நான் கைது செய்யப்பட்டால் சிறையிலும் எனது போராட்டத்தை தொடருவேன். 

இந்த முறை நான் எதிர்பார்ப்பதுபோல் அரசுதரப்பில் இருந்து சரியான விடை கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிட மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார். #AnnaHazare #tamilnews #indefinitefast #lokpalbill