காஷ்மீர் சென்றுள்ள சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:-
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இந்திய வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றியவர் அம்பேத்கர். அவர் இந்த சமூகத்துக்கு செய்த பங்களிப்பை நாடு மறந்து விடக்கூடாது. சாதி மற்றும் மத ரீதியில் பிரித்தாளும் சூழ்ச்சியாளர்களிடம் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் நாட்டை பற்றி கவலைப்படாமல் சுயநலமாக இருப்பதே இதற்கு காரணம்.
எதிர்கால இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் சக்தி அவசியம். இதற்காக அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். நம் நாட்டில் கடந்த 22 ஆண்டுகளில் 12 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி விவசாயிகளுக்கு ஓய்வூதியத்தை இதுவரை வழங்கவில்லை.
எனவே விவசாயிகளுக்காகவும், நாட்டில் ஊழலை ஒழிக்கவும் 23-ந் தேதி முதல் டெல்லியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். 2011-ம் ஆண்டில் என் முதுகில் சிலர் குத்தியது போல் இம்முறை ஏமாற மாட்டேன். என்னுடைய இயக்கத்தில் சேர இருப்பவர்களிடம் ரூ.100 உறுதிமொழி பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று கையெழுத்திட்ட பிறகே அவர்களின் பெயர்களை பதிவு செய்வேன்.