கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மனு வழங்கிய காட்சி. 
செய்திகள்

திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்- கலெக்டரிடம் அனிதா ராதாகிருஷ்ணன் மனு

திருச்செந்தூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முழுமையாக செயல்படுத்த கோரி கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ மனு அளித்துள்ளார்.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சந்தித்து ஒரு கோரிக்கை மனு வழங்கினார். அதில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் பேரூராட்சியில் கடந்த 7-1-2010-ல் ரூ.14 கோடியே 48 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் திருச்செந்தூரில் சுமார் 50 முதல் 60 வீடுகளுக்கு மட்டுமே பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதிலும் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஓடுகிறது. ஆகையால் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

எனது தொகுதிக்கு உட்பட்ட மணப்பாடு மீனவ கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். அவர்கள் தொழில் செய்ய இடையூறாக கடற்கரை பகுதிகளில் அவ்வபோது மணல் திட்டு ஏற்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் அங்கு போர்க்கால அடிப்படையில் தூண்டில் பாலம் அமைக்க வேண்டும்.

முதல்-அமைச்சர், ஆலந்தலையில் தூண்டில் பாலம் அமைக்க ரூ.52 கோடியே 46 லட்சம் ஒதுக்கீடு செய்து அறிவித்தார். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. மீனவ மக்களின் நலன் கருதி பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.