கோவை வேட்டைக்காரன்புதூரில் மாணவர்கள் உண்ணாவிரதம் 
செய்திகள்

அனிதா மரணம் - ‘நீட்’ தேர்வு: மாணவர்கள் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று 4-வது நாளாக தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

மாலை மலர்

நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று 4-வது நாளாக தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று முன் தினம் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளி மாணவர்களையும் போராட்டத்திற்கு அழைத்தனர்.

போராட்டத்தின் தீவிரம் அறிந்த கல்லூரி நிர்வாகம் நேற்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டது. இதனால் கல்லூரி மூடப்பட்டு, விடுதியும் அடைக்கப்பட்டது. வெளியூர் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

ஆனால் உள்ளூர் மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதிபட கூறியுள்ளனர்.

அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நேற்று இரவு 61 மாணவர்கள் விடிய, விடிய கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தற்கொலை செய்த மாணவி அனிதாவின் சொந்த ஊரான குழுமூரில் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாணவர்களுடன் ஆசிரியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 200 பேர் வகுப்புகளை புறக்கணித்து இன்று சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் அரசு மருத்துவக்கல்லூரி அருகே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவை சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சூர்யா உள்பட 6 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று பிணம் போல் தங்களை மாற்றிக்கொண்டு நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது மாணவர் சூர்யா மயக்கமடைந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இன்று அவர்கள் தங்கள் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு நூதன போராட்டம் நடத்தினர்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் இன்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு திரண்டனர். அவர்கள் மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யவேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இதேபோல் திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரியில் இரண்டாவது நாளாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 17 பேர் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இரவு 10 மணி ஆகியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

இதையடுத்து போலீசார் மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றிச்சென்று அவரவர் வீடுகளில் விட்டனர். இன்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் மறுத்ததால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் நேற்று 2-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் நளினி மற்றும் பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. ரேஸ்கோர்ஸ் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கல்லூரி விடுதியும் மூடப்படுவதாகவும், மாணவர்கள் அங்கு தங்கியிருக்க அனுமதியில்லை என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டம் காரணமாக வ.உ.சி. மைதானம், கொடிசியா மைதானம், காந்தி பூங்கா, காந்திபுரம் மேம்பாலம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்கள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போலீசார் வாகனங்களில் சென்று ரோந்து சுற்றி வருகின்றனர். மாணவர்கள் திரளாக கூடினால் அங்கு போலீசார் விரைந்து சென்று அவர்களை கலைந்து போகச் செய்கின்றனர்.

ஆனைமலையை அடுத்துள்ள நாலா மூலை சுங்கம் ஸ்ரீராமு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று நீட் தேர்வை திரும்ப பெறக் கோரியும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

கல்லூரியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வினை வாபஸ் பெறக் கோரி கோ‌ஷம் எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இன்று நீட் தேர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள புனித வளனார் கலைக் கல்லூரி மாணவ-மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.