செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார்: நிர்வாகக்குழு தலைவர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார் என்று நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

மாலை மலர்

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் அனில் கும்ப்ளே. இவரது ஓராண்டு பதவிக்காலம் ஜூன் 18-ந்தேதியுடன் முடிவடைகிறது. இவரது தலைமையில் இந்திய அணி மிகப்பெரிய அளவில் சாதனைப்படைத்து வருகிறது. இதனால் அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் விராட் கோலிக்கும் அனில் கும்ப்ளேவிற்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதனால் அனில் கும்ப்ளேயின் பதவி நீட்டிப்பு கேள்விக்குறியானது. புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான வேலை நடைபெற்றது. பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக கங்குலி, லஷ்மண் மற்றும் தெண்டுல்கர் தலைமையிலான ஒரு குழு உள்ளது. இந்த குழு தற்போது புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய இயலாது என்று கூறியது.

இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. இந்த தொடருக்கும் அனில் கும்ப்ளேதான் பயிற்சியாளராக இருப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அனில் கும்ப்ளே ஏற்றுக் கொண்டால் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என்று நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

இதனால் அனில் கும்ப்ளே வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.