செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாலை மலர்

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய தலைவி கலாவதி தலைமையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஊதியக்குழு ஏமாற்றத்தை வலியுறுத்தி காரிமங்கலம் ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு பாண்டிச்சேரி அரசு வழங்குவது போல இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வு ஊதியம் வழங்கவும்,  2016 முதல் ஊதியக்குழு நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்கவும் மற்றும் மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்பட வேண்டும் முதலான கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் நிர்வாகிகள் துர்கா தேவி, பாரதி, மலர்கொடி, ஈஸ்வரி  திலகம்  மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சூளகிரியில் உள்ள ஒன்றிய ஐ.சி.டி.எஸ். அலுலவகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் தேவராஜ், ஒன்றிய தலைவி பூலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை காலமுறை ஊதியத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.