அமராவதி:
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிந்து தனி மாநிலமாக உதயமான பிறகு, ஐதராபாத் தெலுங்கானாவின் தலைநகரானது. ஆந்திர தலைநகராக அமராவதி இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடரில் அமராவதி தலைநகர் பற்றிய விவாதம் நடந்தது.
அக்கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:-
‘மாநில பிரிவினையால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமராவதியை தலைநகராக்கும் பணிகள் இப்போது தான் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை சட்ட சபைத் தலைநகராக்கிக் கொள்ளலாம். துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும், கர்னூலை நீதித்துறைகளுக்கான தலைநகரமாகவும் மாற்றலாம். 3 தலைநகரங்கள் உருவாக்குவது குறித்து நாம் பரிசீலனை செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழு எடுக்கும்.’
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை பலரும் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மூன்று தலைநகரங்களை உருவாக்குவது வீண்வேலை என எதிர்க்கட்சிகளும் அதிர்வலைகளை கிளப்பியது.
இந்நிலையில் மூன்று தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தை எதிர்த்து அமராவதி நகரைச் சுற்றியுள்ள 29 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணா, சாலை மறியல் மற்றும் வீதிகளில் உணவு சமைத்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
‘ஜெகன் மோகன் ரெட்டி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, அமராவதியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவதற்காக 33 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதை ஆதரித்தார். பின்னர் அவர் முதலமைச்சர் ஆன பிறகு, அமராவதியை முக்கியத்துவம் அல்லாத சட்டசபை தலைநகராக்கிக் கொள்ள விரும்புகிறார். இது வருத்தமளிக்கிறது. தலைநகருக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடியின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு செல்ல உள்ளோம்’ என்று விவசாயிகள் தெரிவித்தனர்.