வீடு புகுந்து கொள்ளை 
செய்திகள்

ஆண்டிபட்டி அருகே விவசாயி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

ஆண்டிபட்டி அருகே பட்ட பகலில் விவசாயி வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோவிந்த நகரத்தைச் சேர்ந்தவர் எத்திராஜ் (வயது 65). விவசாயி. இவர் நேற்று மதியம் தனது மனைவியுடன் சொந்த வேலை வி‌ஷயமாக வெளியே சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்து 500 பணம், 6 கிராம் தங்க மோதிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மாலையில் வீடு திரும்பிய எத்திராஜ் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடு போனது தெரிய வந்தது.

இது குறித்து கண்டமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. (பொறுப்பு) ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு கைரேகைகளை சேகரித்தனர்.

மேலும் மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் வரை சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பட்ட பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.