கொலை 
செய்திகள்

ஆண்டிப்பட்டி அதிமுக பிரமுகர் கொலையில் துப்பு துலங்க முடியாமல் போலீசார் திணறல்

ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் துப்பு துலங்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை மகன் சதீஸ்குமார் (வயது 24). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் சொந்தமாக கார் வைத்தும் வாடகைக்கு விட்டு வந்தார். இவர் அ.தி.மு.க. ஒன்றிய மாணவர் அணி துணைச் செயலாளராகவும் இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.வி. ரெங்கநாதபுரம் பகுதியில் எரிந்த நிலையில் சதீஸ் குமார் பிணமாக கிடந்தார்.

இது குறித்து 3 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாததால் தனிப்படை கலைக்கப்பட்டது.

இதனையடுத்து ஆண்டிப்பட்டி போலீசார் இறந்த சதீஸ்குமாரின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தினர். இறப்பதற்கு முன்பு யார் யாருடன் பேசினார்? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் சதீஸ்குமாருக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. தனது தொழிலுக்காக உறவினர் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி அதனை அடைப்பதில் சிரமப்பட்டு வந்துள்ளார். எனவே அதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.