ஆண்டிபாளையம் குளத்தின் கரை பகுதியில் நீர் காக்கைகள் அதிகளவில் உள்ளதை காணலாம் 
செய்திகள்

வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமான ஆண்டிபாளையம் குளம்

திருப்பூர் அருகே வெளிநாட்டு பறவைகள் தஞ்சம் புகும் சரணாலயமாக ஆண்டிபாளையம் குளம் மாறி உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி குளத்தை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூரிலிருந்து மங்கலம் செல்லும் சாலையில் உள்ளது ஆண்டிபாளையம். இங்கு சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் குளம் ஒன்று உள்ளது. கடந்த காலங்களில் இந்த குளம் போதிய பராமரிப்பு இன்றி, நீர்வழிப் பாதைகள் சேதமடைந்ததால் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இந்த குளம் சீரமைக்கப்பட்டது.

இந்தக் குளம் முற்றிலும் தூர்வாரப்பட்டு பறவைகள், உயிரினங்கள் பல்லுயிர் பெருக்கத்துக்கு ஏற்றவாறு 2 திட்டுகளும் அமைக்கப்பட்டது. மேலும் இந்த குளத்தின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, சுற்றிலும் சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது இந்த குளம் வற்றாத நீர் நிலையாக திகழ்கிறது.

மழைக்காலம் மட்டுமின்றி, கடும் கோடை காலத்திலும் நீர் நிரம்பி காட்சியளிக்கும் இந்த குளம் இப்பகுதி விவசாயத்துக்கு மட்டுமின்றி முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. தற்போது இந்த குளத்தில் சுற்றுப் பகுதியில் நிலத்தடி நீரும் அதிக அளவு உயர்ந்துள்ளது மேலும், நீர் நிரம்பி காட்சியளிக்கும் இந்த குளத்தில் மீன்கள், உள்நாட்டு பறவையினங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளான கூழைக்கிடா, செங்கால், நாரை உள்ளிட்ட பறவைகளும் இங்கு அதிக அளவில் உள்ளன. நீர் காக்கைகளும் குளத்தில் நீந்தி தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்கின்றன. பறவைகள் குளத்தில் ஆங்காங்கே பறப்பது கண்ணுக்கு விருந்தாக உள்ளது. மொத்தத்தில் பறவைகளின் சரணாலயமாக மாறி வருகின்றன.

இந்த நிலையில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களால் புத்துயிர் பெற்ற இந்தஆண்டிபாளையம் குளம் தற்போது மீண்டும் கழிவுகள் கொட்டப்படுவதால் அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆண்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த குளத்தில் கலக்கிறது. இங்கு குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டு வருகிறது. அதே போல் இப்பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் இந்தக் குளத்தில் கலக்கும் பரிதாபம் சூழல் நிலவுகிறது. அதன் கரை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி காட்சியளிக்கின்றன.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

ஆண்டிபாளையம் குளம் பல்லாண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அரசு உதவியுடன் இந்த குளத்தை சீரமைத்தனர். இதனால் இந்த குளம் தற்போது வற்றாத நீர் நிலையாக மாறியுள்ளது. அனைவரது முயற்சியால் புத்துயிர் பெற்ற இந்த குளத்தில் தற்போது சாக்கடை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், குப்பைகள் கலப்பது வேதனையான விஷயமாக உள்ளது. இதன் சுற்றுவட்டார குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பூங்காவுக்கு பின்புறம் உள்ள கால்வாய் வழியாக குளத்தில் கலக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குளத்தில் கழிவுநீர், குப்பைகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இங்குள்ள மீன், பறவை உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.