கோப்பு படம்: ஐபோன் 6 
செய்திகள்

கடவுளுக்கு புத்தம் புதிய ஐபோன் 6 - குழம்பிய கோயில் அதிகாரிகள்

ஆந்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் உண்டியலில் வாரண்டி அட்டையுடன் புத்தம் புதிய ஐபோன் 6 கைபேசியை பக்தர் காணிக்கையாக்கி உள்ளார்.

மாலை மலர்

ஐதராபாத்:

ஆந்திரபிரதேச மாநிலத்தின் கிருஷ்னா மாவட்டத்தில் உள்ள சுப்ரமனிய சுவாமி கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்த ஐபோன் 6 கோயில் நிர்வாக அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோயில் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகளை 108 நாட்களுக்கு ஒருமுறை கோயில் நிர்வாகிகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன் காணிக்கைகளை எடுக்க கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. வழக்கமாக பணம், நகை அல்லது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கைப்பேசிகள் உண்டியலில் இருக்கும்.

வழக்கத்திற்கு மாறாக புத்தம் புதிய ஐபோன் 6, வாரண்டி அட்டையுடன் சீலிடப்பட்டு உண்டியலில் இருந்தது கோயில் நிர்வாகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐபோன் காணிக்கை செலுத்தியது யார் என்ற தகவல் அறியப்படாத நிலையில், இதை வைத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர். 

இதுகுறித்து சுப்ரமனிய சுவாமி திருக்கோயில் அதிகாரி ஒருவர் கூறும் போது, மொபைல் போன் விற்பனை கடை அல்லது மொபைல் சார்ந்த வியாபாரம் செய்யும் யாரேனும் அதிர்ஷ்ட நோக்கில் முதல் மொபைலை காணிக்கையாக்கி இருக்கலாம் என தெரிவித்துள்ளார். எனினும் இதனை அவர் உறுதி செய்யவில்லை.

காணிக்கையாக கிடைத்த புதிய ஐபோன் 6 மாடலை ஏலத்தில் விற்பனை செய்து கோயில் திருப்பணிகளுக்கு பயன்படுத்தலாமா, அல்லது கோயில் நிர்வாக அலுவலகத்திற்கு வரும் பக்தர்களின் அழைப்புகளுக்கு பதில் அளிப்பது, இதர நிர்வாக பணிகளுக்கு பயன்படுத்தலாமா அல்லது வேறு முடிவுகளை எட்டும் முன் அறநிலையத்துறையினரிடம் விவாதிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.