செய்திகள்

சர்வதேச செம்மர கடத்தல்காரனை கைது செய்தது ஆந்திர போலீஸ் - ரூ.4 கோடி செம்மரங்கள் பறிமுதல்

சர்வதேச செம்மரக் கடத்தல்காரனை ஆந்திர போலீசார் கைது செய்து, அவனிடம் இருந்து 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மாலை மலர்

கடப்பா:

ஆந்திர மாநில வனப்பகுதியில் கிடைக்கும் செம்மரங்களுக்கு, சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உள்ளதால் அவற்றை சட்டவிரோதமாக வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவது அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க ஆந்திர வனத்துறையும் காவல்துறையும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த மரம் வெட்டும் கூலித்  தொழிலாளர்களை இடைத் தரகர்கள் அழைத்துச் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் தமிழர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றும் 13 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தலில் ஈடுபடும் முக்கிய குற்றவாளிகள் மற்றும் இடைத்தரகர்கள் தப்பிவிடுவதால், வெளிநாடுகளுக்கு செம்மரம் கடத்துவது தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலத்தில் சர்வதேச கடத்தல்காரனை ஆந்திர போலீசார் கைது செய்தனர். பின்னர் அவன் கடப்பாவுக்கு கொண்டு வரப்பட்டான்.

இத்தகவலை கடப்பா மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குடோன்களில் செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், சர்வதேச கடத்தல்காரன் பதுங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு போலீஸ் படைகள் ராஜஸ்தான் சென்று உள்ளூர் போலீஸ் உதவியுடன் சர்வதேச கடத்தல்காரன் அசோக் குமார் அகர்வாலின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

பின்னர் அகர்வால் தனது குடோனுக்கு கடந்த 9-ம் தேதி  சென்றபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ரகுநாதபுரம் மற்றும் சர்னா தூங்கர் குடோன்களில் இருந்து 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மர கட்டைகள் மற்றும் பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான அப்துல் நயீம் கைது செய்யப்பட்டான். விசாரணையில், அவன் இந்தோனேசியாவில் இருக்கும் சர்வதேச கடத்தல்காரன் மூலம் அசோக்குமாருக்கு செம்மரங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews