செய்திகள்

ஆந்திரா- கேரளாவுக்கு ஜீப்பில் 240 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு ஜீப்பில் 240 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

திண்டுக்கல் போதை தடுப்பு டி.எஸ்.பி. ஆனந்த் தலைமையில் இன்ஸ்பெக்டர் கவுசர்நிஷா மற்றும் போலீசார்கள் சந்திரன், வாஞ்சிநாதன், சுரேஷ், அய்யப்பன் ஆகியோர் வத்தலக்குண்டு சாலையில் உள்ள கே.பாறைப்பட்டி கருப்பணசாமி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஆந்திரா பதிவு எண் கொண்ட ஜீப்பை நிறுத்தினர். டிரைவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் ஜீப்பை சோதனையிட்டனர். அதில் 8 மூடைகளில் சுமார் 240 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

ஜீப்பில் வந்த 2 பேரையும் போலீசார் விசாரித்தனர். விசரணையில் அவர்கள் உத்தமபாளையம் போர்ட் ஸ்கூல் தெருவை சேர்ந்த முருகன் மகன் கோபி (வயது24), நாராயணதேவன்பட்டி நடுத்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜ்குமார் (23) என தெரிய வந்தது.

மேலும் அவர்கள் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 240 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். கஞ்சா மற்றும் 2 பேரையும் திண்டுக்கல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். வருசநாடு, கம்பம் பகுதியில் கஞ்சா கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது ஆந்திராவில் இருந்தும் கஞ்சா கடத்துவது அதிகரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காட்ரோடு பகுதியில் இதேபோன்று ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். தற்போது மீண்டும் ஒரு கஞ்சா கடத்தல் கும்பல் சிக்கி இருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இவர்கள் எங்கிருந்து கஞ்சாவை பெற்று வந்தனர். இதில் யார்? யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews