செய்திகள்

குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

குட்கா விற்பனையை சட்டவிரோதமாக அனுமதிப்பதற்காக குட்கா நிறுவனங்களிடமிருந்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு கையூட்டு கொடுக்கப்பட்டது குறித்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் முதல் எதிரியாக சேர்க்கப்பட வேண்டிய அமைச்சரையும், காவல் உயரதிகாரிகளையும் சேர்க்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக தமிழகக் காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப்பிரிவு கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தமிழக காவல்துறை, உணவுப்பாது காப்புத்துறை, சென்னை மாநகராட்சி, வணிகவரித் துறை, மத்திய கலால்துறை ஆகியவற்றில் பணியாற்றும் 17 அதிகாரிகள் மட்டுமே இந்த வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே உதவி ஆணையர்கள் மற்றும் அதற்குக் கீழ் உள்ள அதிகாரிகள் ஆவர்.

சட்டவிரோதமாக குட்கா விற்க அனுமதி தரும் அதிகாரம் இந்த அதிகாரிகளில் ஒருவருக்குக் கூட இல்லை. இவர்கள் அனைவருமே குட்கா ஊழலின் முதன்மை எதிரிகளான சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை மாநகரக் காவல் ஆணையர்களாக பணியாற்றிய இரு இ.கா.ப. உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு உடந்தையாகவும், உதவியாகவும் மட்டுமே இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானவரித்துறை ஆய்வு நடத்தப்பட்ட குட்கா நிறுவனத்தின் பங்குதாரரான மாதவராவ் என்பவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், ஒவ்வொரு மாதமும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.14 லட்சம், மத்திய கலால் அதிகாரிகளுக்கு ரூ.2 லட்சம், மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு ரூ.3.5 லட்சம், வட சென்னை இணை ஆணையருக்கு ரூ.5 லட்சம், செங்குன்றம் உதவி ஆணையருக்கு ரூ.10 லட்சம், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரூ.7 லட்சம், சென்னை மாநகர காவல் ஆணையர்களுக்கு ரூ.20 லட்சம் கையூட்டு கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

இதுதவிர பல்வேறு தருணங்களில் சென்னை காவல் ஆணையராக இருந்த இரு அதிகாரிகளுக்கு முறையே ரூ.1.40 கோடி, ரூ.75 லட்சம் கையூட்டாக வழங்கப்பட்டதாகவும் ஒட்டு மொத்தமாக ரூ.39.91 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக மாதவராவ் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வருமானவரித்துறையின் புலனாய்வுப்பிரிவு முதன்மை இயக்குனர் பாலகிருஷ்ணன்,ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழக அரசின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவை கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கொடுத்துள்ளார். இந்த அறிக்கை அப்போதைய காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமாருக்கும் அனுப்பப்பட்டது.

அமைச்சரும், காவல்துறை உயரதிகாரிகள் இருவரும் தான் இந்த ஊழலில் சூத்திரதாரிகள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ள நிலையில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்? அதுமட்டு மின்றி, இதுதொடர்பாக எவரும் கேள்வி எழுப்பி விடக்கூடாது என்பதற்காக வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்கள் இருந்தால் அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இவையெல்லாம் எதிர்க்கட்சிகளின் வாயை மூடும் தந்திரமே தவிர, உண்மையான அக்கறை அல்ல.

ஊழல் புலிகளை விட்டு விட்டு எலிகள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இவ்வழக்கை காவல்துறை விசாரித்தால் உண்மைக் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள் என்ற குற்றச்சாற்று உண்மையாகியுள்ளது.

எனவே, இந்த ஊழலில் உண்மை வெளிவர வேண்டுமானால் அமைச்சர் விஜயபாஸ்கரையும், காவல் துறை உயர் அதிகாரிகள் இருவரையும் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். அத்துடன் குட்கா ஊழல் வழக்கை நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.