செய்திகள்

அ.தி.மு.க. அணிகள் இணைப்பால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை: அன்புமணி ராமதாஸ்

அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைந்ததால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை தர்மபுரி தொகுதி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

மாலை மலர்

தர்மபுரியில் வீட்டுக்கு ஒரு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க தலைவரும், தர்மபுரி தொகுதி எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணைகட்ட எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்கள் யாரிடமாவது கருத்து கேட்டாரா? சட்டமன்றத்தில் விவாதித்தாரா? அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்டாரா? இந்த பிரச்சினையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

அ.தி.மு.க.வின் இரு அணிகள் இணைந்ததால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணை நிரம்பி வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அணையில் இருந்து வெளியேறும் தென்பெண்ணை ஆற்றின் தண்ணீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஓரிரு நாளில் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.