செய்திகள்

சாதாரண மழைக்கே சென்னையில் வெள்ளம்: அன்புமணி ராமதாஸ்

முன்எச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் சாதாரண மழைக்கே சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறினார்.

மாலை மலர்

சென்னை:

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அதிரடியாகத் தொடங்கியிருக்கிறது. மழை பாதிப்புகளை சமாளிக்க முடியாமல் சென்னை மாநகர மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால், அரசோ பருவ மழை தொடங்கிய பிறகும் வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளாமல் உறங்குகிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிலவிய கடுமையான வறட்சியாலும், சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்தாலும் வட கிழக்கு பருவமழையை வரமாகக் கருதி எதிர்ப்பார்த்திருந்தனர். சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழை மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருவதால் பாசனத்திற்கான நீர் கிடைத்து விட்டதாக உழவர்கள் மனநிறைவு அடைந்துள்ளனர்.

சென்னையில் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் வேகமாக நிரம்பி வருவதால் அடுத்த சில மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற மகிழ்ச்சி மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் செயல்படாத தன்மையால் வடகிழக்கு பருவமழை என்ற வரம் சென்னை மக்களுக்கு சாபமாக மாறியிருக்கிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் அளவு அபாயகரமான கட்டத்தை எட்டவில்லை என்றாலும் கூட மழை நீர் வடியவில்லை. சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து சாலைகளிலும் ஏரிகளைப் போன்று தண்ணீர் தேங்கி நிற்கிறது.

சென்னை மாநகரில் மட்டும் 105 இடங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதாக சென்னை மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்துள்ளன. ஆனால், தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் வடிகால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை என்பதற்கு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரே சாட்சியாகும். சென்னையின் பல பகுதிகளில் இப்போது தான் வெள்ளநீர் வடிகால்களை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை முதல்- அமைச்சர் மறுத்தால் அவரை நேரில் அழைத்துச் சென்று காட்டவும் தயாராக இருக்கிறேன்.

சென்னையில் சாதாரணமாக பெய்த மழைக்கே இந்த அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதற்கு காரணம் போதிய முன்னெச்சரிக்கை எடுக்காததும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைநோக்குப் பார்வை இல்லாததும் தான். கடந்த கால நிகழ்வுகளில் இருந்தும் அரசு பாடம் கற்கவில்லை.

கடந்த 2005-ம் ஆண்டில் பருவமழையால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘‘சென்னையில் மழையால் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க நிரந்தத் தீர்வு காணப்பட வேண்டும். இதற்கான விரிவானத் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தயாரித்து செயல்படுத்தும்’’ என்று கூறினார்.

அவர் கூறி 12 ஆண்டுகள் ஆகி விட்டன, அவரும் மறைந்து விட்டார். ஆனாலும் வெள்ளத் தடுப்புக்கான நிரந்தரத் திட்டம் இன்று வரை தயாரித்து செயல்படுத்தப்படாதது வெட்கக்கேடு. திராவிடக்கட்சிகளின் ஆட்சித்திறன் இவ்வளவு தான்.

வடகிழக்குப் பருவமழை இப்போது தான் தொடங்கியிருக்கிறது. இனிவரும் நாட்களில் இன்னும் கடுமையான மழை பெய்யக்கூடும். எனவே தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.