தாமோ அன்பரசன் 
செய்திகள்

அதிகமாக உயர்த்திய வீட்டு வரியை குறைக்க வேண்டும் - தாமோ அன்பரசன் வலியுறுத்தல்

உயர்த்தப்பட்டுள்ள வீட்டு வரி உயர்வை குறைக்க அரசு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தாமோ அன்பரசன் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை:

உயர்த்தப்பட்டுள்ள வீட்டு வரி உயர்வை குறைக்க அரசு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

தா.மோ.அன்பரசன்: கடந்த 2008-ம் ஆண்டு ஆலந்தூர் பகுதி சென்னை புறநகர் பகுதியில், நகராட்சியாக இருந்த போது அரசு வரியை உயர்த்தியது. அந்த வரியை அப்போது கட்டிவிட்டோம். இன்றைக்கு சென்னை மாநகராட்சி 20 வருடங்களாக வரி உயர்த்தப்படாமல் இருக்கிற நிலையில் இப்போது ஆலந்தூர் பகுதி சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பிறகு இரண்டாவது முறையாக எங்களுக்கு வரியை உயர்த்திருக்கிறது.

ஏற்கனவே 2008-ம் ஆண்டு உயர்த்தப்பட்ட வரியை நாங்கள் கட்டி விட்டோம். இப்போது இரண்டாவது முறையாக வீட்டு வரியை உயர்த்தி, அதை கட்டச் சொல்கிறீர்கள். 1,600 ரூபாய் வீட்டு வரியாக செலுத்திய நபர் ஒருவருக்கு இப்போது 12,000 ரூபாய் வீட்டு வரி கட்ட வேண்டும் என்று வந்துள்ளது. இதற்காக நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறார்கள். எனவே அரசு ஒரு குழுவை அமைத்து, கண்காணித்து ஆய்வு செய்து நியாயமான முறையில் நீங்கள் வரியை விதித்திட வேண்டுமென்று தங்கள் மூலமாக அமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி:- சட்டமன்ற உறுப்பினர் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று இங்கே தெரிவித்தார். முதல்-அமைச்சர் இதுகுறித்து ஏற்கனவே தனியாக கூட்டம் ஒன்றை நடத்தி துறை மூலமாக குழுவினை அமைத்து விட்டார். சென்னைக்கு 20 வருடம் கழித்துதான் வரி உயர்வை போட்டிருக்கிறோம். 42 உள்ளாட்சிகள் இன்றைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. முதல்-அமைச்சரும் அதைத்தான் தெரிவித்திருக்கிறார். கண்டிப்பாக அதுவும் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT