செய்திகள்

அன்பழகன் வீட்டில் நகை திருடியதாக புகார்- போலீஸ் விசாரணையால் வேலைக்கார பெண் தற்கொலை முயற்சி

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வீட்டில் நகை திருடியதாக வேலைக்கார பெண் மீது புகார் செய்யப்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அம்பத்தூர்:

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் கீழ்ப்பாக்கம் ஆஸ்டிரின் கார்டன் 2-வது தெருவில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் கடந்த வாரம் 10 பவுன் நகை காணாமல் போனது. இது தொடர்பாக தலைமை செயலக காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. அன்பழகன் வீட்டில் வேலை பார்த்த வில்லிவாக்கம் பாரதிநகரைச் சேர்ந்த நளினியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் நகையை திருடவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். தன் மீது திருட்டு புகார் கொடுத்ததாலும், போலீஸ் விசாரணையாலும் நளினி மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் அயனாவரம் சோலையம்மன் கோவில் தெருவில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு நளினி வீட்டில் இருந்த தைராய்டு மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.