செய்திகள்

மதச்சார்பின்மை குறித்து சர்ச்சை பேச்சு: மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கோரினார்

மதச்சார்பின்மை குறித்து சர்ச்சைக்குரிய தன்னுடைய பேச்சுக்கு மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

மாலை மலர்

புதுடெல்லி:

மதச்சார்பின்மை குறித்து சர்ச்சைக்குரிய தன்னுடைய பேச்சுக்கு மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே. இவர் கர்நாடகாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “சாதி பெயரை சொன்னால் அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் மதசார்பற்றவர்கள் என்று சொல்பவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது. அவர்களுக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மாற்றுவோம்” என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் நேற்று எதிரொலித்தது. மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேயின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூன் கார்கே கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய மந்திரி தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மல்லிகார்ஜூன் கார்கே வலியுறுத்தினார்.

இதற்கு மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பதில் அளிக்கையில், நான் பாராளுமன்றத்தையும், அரசியல் சாசனத்தையும் மதிக்கிறேன். அது போல அம்பேத்கரையும் மிகவும் மதிக்கிறேன். அரசியல் சட்டம் என்பது மிகவும் உயர்ந்தது. இந்திய குடிமகனாக நான் அதற்கு எதிராக செயல்பட மாட்டேன் என்றார்.

எனினும் அனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அம்பேத்கருக்கு அவமரியாதை செய்ய யாருக்கும் தகுதி இல்லை. அனந்தகுமார் ஹெக்டே பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்துவது போல இருந்தால் அவர் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார். இதனால் அவருடைய தகுதி ஒன்றும் குறைந்து விடாது என்று கூறினார்.

சபாநாயகர் தலையிட்டதால் வேறுவழியின்றி மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் பேசுகையில், நான் பேசிய பேச்சு தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளது. எனினும் என்னுடைய பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார்.

இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.