கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது காலாபுராகி மாவட்டத்தை சேர்ந்தவர் ஹனுமந்த். ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
ஹனுமந்த் பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வந்தாலும், சமூக தொண்டிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் காலாபுராகியில் அமைந்துள்ள எம்.ஜி. காலனியில் இருக்கும் தொழுநோயாளிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்த சேவையை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அப்பகுதி நோயாளிகள் கூறுகையில், இந்த பகுதியில் எந்த டாக்டர்களும் சிகிச்சை செய்வதற்காக வருவதில்லை. ஆனாலும் ஹனுமந்த் எவ்வித அருவெறுப்பும் இன்றி எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். கால்களை சுத்தம் செய்து மருந்து போடுவது, எங்களை வெளியே அழைத்துச் செல்வது என நாங்கள் அழைக்கும் போதெல்லாம் வந்து உதவி வருகிறார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஹனுமந்த் கூறுகையில், நான் எனது தாய், தந்தையுடன் இங்கு தான் வசித்து வந்தேன். எனது தாய்க்கு தொழுநோய் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்க மனமின்றி எனது தந்தை எங்களை விட்டு வெளியே சென்றுவிட்டார். அன்று முதல் நான் இந்த பணிகளை செய்து வருகிறேன். இதையடுத்தே நான் சம்பாதித்த பணத்தில் இருந்து தொழுநோயாளிகள் அனைவருக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.