சண்டிகார்:
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருந்த நடிகர் வினோத் கன்னா கடந்த ஏப்ரல் 27-ம் தேதி மரணம் அடைந்தார். இதையொட்டி குர்தாஸ்பூர் எம்.பி. தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர் 1,93,219 வாக்குகள் வித்தியாசத்தில் அகாலிதளம் கூட்டணியின் பா.ஜனதா வேட்பாளர் ஸ்வரன் சலாரியாவை தோற்கடித்தார்.
காங்கிரசுக்கு 4,99,752 வாக்குகளும் பா.ஜனதாவுக்கு 3,06,533 வாக்குகளும் கிடைத்தன. ஆம் ஆத்மி கட்சிக்கு 23,579 வாக்குகள் கிடைத்தது.
இந்த வெற்றி குறித்து பஞ்சாப் காங்கிரஸ் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் கூறியதாவது:-
குர்தாஸ்பூர் தேர்தல் முடிவு நாடு முழுவதும் காங்கிரஸ் புத்துயிர் பெறும் பாதையில் இருப்பதை காட்டுகிறது. காங்கிரசின் இந்த வெற்றி அகாலிதளத்துக்கு கிடைத்த மரண அடியாகும். கடந்த 6 மாத எனது ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றாகும். பஞ்சாபில் ஆம்ஆத்மி அரசியல் வாழ்வு இதோடு முடிந்துவிட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குர்தாஸ்பூர் தேர்தல் முடிவு தொடர்பாக பா.ஜனதா மீது வினோத் கன்னா மனைவி கவிதா அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தல் முடிவு எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன். எனினும் இந்த தோல்வி குறித்து பா.ஜனதா தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.