குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஒன்றியக்குழு வார்டுகள் உள்ளன. இதில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்தநிலையில் 10 பேரில் 3 பேர் அ.தி.மு.க.வில் சேர்ந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த 3 பேரும் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் என்பதால் வேட்புமனு வாபஸ் பெற பலர் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அ.ம.மு.க. வேட்பாளரான திருமுருகன் என்பவரை தேர்தலில் போட்டியிடாமல் மனுவை வாபஸ் பெற செய்வதற்காக அ.தி.மு.க. சார்பில் அவரிடம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அ.ம.மு.க.வினர், திருமுருகனை குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் வைத்து பூட்டி விட்டனர். வேட்புமனு வாபஸ் பெறக்கூடிய நேரம் முடிந்த பின்னரே அவரை கழிப்பறையில் இருந்து வரச்செய்து, தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தில் கையொப்பமிட செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.