வலையில் சிக்கிய அம்மன் உளுவை மீன் 
செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய 1½ டன் எடையுள்ள அரிய வகை அம்மன் உளுவை மீன்

இடிந்தகரையில் மீனவர் வலையில் அரிய வகை மீனான 1½ டன் எடையுள்ள அம்மன் உளுவை மீன் சிக்கியது மீனவர்கள் மத்தியில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கூடங்குளம்:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த மீனவர் வில்சன் (வயது 59). வில்சன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 4 பேர் சேர்ந்து கடலில் மீன் பிடிப்பதற்காக நேற்றிரவு படகில் சென்றனர். பின்னர் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று நடுக்கடலில் ஆழமான பகுதியில் மீன்களை பிடிப்பதற்காக வலைகளை விரித்திருந்தனர்.

அப்போது அந்த வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கிக்கொண்டு அங்கும் இங்கும் இழுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் வலையில் வேறு ஏதோ சிக்கி உள்ளது என எண்ணி உடனடியாக கரைக்கு திரும்பினர். இதையடுத்து அவர்கள் கரைக்கு சென்றதும் வலையில் சிக்கிய மீனை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

அந்த மீன் அரிய வகை அம்மன் உளுவை ஆகும். அதன் எடை சுமார் 1½ டன் இருக்கும் என கூறப்படுகிறது. இதனை ஏராளமான மீனவர்கள் சேர்ந்து கரைக்கு கொண்டு வந்தனர். இந்த மீனை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதையடுத்து வலையில் சிக்கிய அம்மன் உளுவை குறித்து கூடங்குளம் போலீசாருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மருத்துவக்குழுவினருக்கு தகவல் அளித்தனர்.

மருத்துக்குழுவினர் வந்து வலையில் சிக்கிய அம்மன் உளுவை மீனை பரிசோதனை செய்தனர். இதையடுத்து அதனை அப்பகுதியில் மூடி சென்றனர். இந்த பகுதியில் அரிய வகை மீனான அம்மன் உளுவை சிக்கியது மீனவர்கள் மத்தியில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.