சென்னை:
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் திட்டம் மூலம் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு அறிவித்த இத்திட்டத்திற்கு பெண்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் பெண்கள் ஆர்வமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.
விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தியதால் அரசு 5 நாட் கள் நீட்டிப்பு செய்தது. இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் இதுவரையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். வேலை பார்க்கும் கம்பெனி, நிறுவனங்களிடம் இருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
டிரைவிங் லைசென்ஸ் அல்லது பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.), இருந்தால் கூட விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பெறப்படுகின்ற விண்ணப்பங்களை சரி பார்த்து ஆய்வு செய்யும் பணியும் ஒருபுறம் நடை பெற்று வருகிறது.
சென்னையில் நேற்று வரை 30 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கடைசி நாளான இன்று 2 ஆயிரம் மனுக்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது மாநகராட்சி மண்டல அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றன.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என முதலில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு விண்ணப்பதாரர்களின் வீடுகளில் நேரடி ஆய்வு செய்யம்பணி நடக்கிறது.
வேலை செய்யும் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட கடிதம் உண்மைதானா? விண்ணப்பதாரர்கள் அங்கு வேலை செய்கிறாரா? என்பதை போன் மூலமும், நேரிலும் சென்று ஆய்வு நடத்துகின்றனர். சுயமாக தொழில் செய்யும் பெண்களாக இருந்தால் அவர்கள் தொழில் செய்யும் இடத்தை பார்வையிடுகிறார்கள்.
அந்த முகவரியில் தொழில் செய்கிறார்களா? அங்கு சென்று சுயதொழில் செய்வது உண்மையா? தவறான தகவல் கொடுத்து இருக்கிறார்களா என்றெல்லாம் விசாரணை நடத்திய பிறகுதான் மானியம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.
சென்னையில் 9,500 பெண்களுக்குதான் முதல் கட்டமாக ஸ்கூட்டர் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் 30 ஆயிரத்திற்கும் மேலான பெண்கள் விண்ணப்பித்து இருப்பதால் தகுதியான மற்றும் மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமையுடன் வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.