சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்தனர். பேரவை செயலாளரும் வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் பேரவையின் மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழாவை நாட்டு மக்களின் நல்வாழ்வு தினமாக ஆண்டு முழுவதும் கடைப்பிடித்து நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்றும், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
அ.தி.மு.க. தலைமை அலுவலக கட்டிடத்திற்கு அம்மா அன்பு மாளிகை என்று பெயரிட வேண்டும், தமிழக சட்டமன்ற வளாகம் மற்றும் பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறக்க வேண்டும், பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதா உருவப்படம் திறக்க முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. #tamilnews