நாட்டின் பல பகுதிகளில் மழையின்மை மற்றும் அளவுக்கதிகமான மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மை பொய்த்துப் போனதுடன், வங்கிக்கடனும் சேர்ந்து தலைமேல் பாரமாகி விட்ட மனவேதனையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
சில மாநிலங்கள் ஓரளவுக்கு விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருந்தாலும், பரவலாக வங்கிக் கடன்களால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 1398 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து நடிகர் அமிதாப் பச்சன் செலுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர் மகாராஷ்டிரம் மாநிலத்தை சேர்ந்த சுமார் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைத்துள்ள அமிதாப் பச்சன், ‘என்னால் இயன்ற இந்த சிறிய உதவி இதர மாநிலங்களிலும் தொடரும்’ என தனது வலைப்பூவில் (பிளாக்) சமீபத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனைதொடர்ந்து, தற்போது 1398 விவசாயிகளின் வங்கி கடன் தொகையான ரூ.4.05 கோடி ரூபாய் தொகையை அவர் அடைத்துள்ளார்.