செய்திகள்

தமிழ்நாட்டில் அமித்ஷா வருகை திடீர் ரத்து

தமிழ்நாட்டுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் வருகை திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரது தமிழக வருகை ஒத்தி வைக்கப்படுவது இது 2-வது முறையாகும்.

மாலை மலர்

அமித்ஷா நாளை காலை சென்னை வருவதாக இருந்தது. நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24-ந் தேதி கோவையில் சுற்றுப்பயணம் செய்ய இருந்தார்.

இந்த நிலையில் அவரது சுற்றுப்பயணம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக இன்று காலையில் செய்தி வெளியிடப்பட்டது.

அமித்ஷாவின் தமிழக வருகை ஒத்தி வைக்கப்படுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே கடந்த மே மாதம் அமித்ஷாவின் சுற்றுப்பயணம் இதே போலதான் கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த முறை அவர் நிச்சயம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரது சுற்றுப்பயணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்த பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் செல்ல இருந்த வழி நெடுகிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் கோவையிலும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் திடீரென்று அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் வேதனை அடைந்தனர்.

சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் எதுவும் சொல்லவில்லை. அ.தி.மு.க. அணிகள் இணைப்பு வி‌ஷயத்தில் பா.ஜனதா தீவிரமாக செயல்படுவது தெரிந்ததே. இரு அணிகளும் இணையும் நேரத்தில் அமித்ஷா இங்கு இருப்பது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தலாம். எனவே அமித்ஷா வருகை திடீரென்று ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.