செய்திகள்

மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் காங்கிரஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித்ஷா

ஆந்திராவில் சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா வலியுறுத்தினார்.

மாலை மலர்

ஐதராபாத்:

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதியில் கடந்த 2007, மே 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர்.

இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது. 

குற்றவாளிகளில் சுனில் ஜோஷி விசாரணையின் போதே படுகொலை செய்யப்பட்டார். சந்தீர் வி.டங்கே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராம்சந்திர கல்சங்கரா இரண்டு பேரும் விசாரணையில் இருந்து தப்பினர். ஏனைய 5 பேர் மீது ஐதராபாத்தில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி என்.ஐ.ஏ நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது.

இந்நிலையில், ஆந்திராவின் சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக காங்கிரச் கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, கட்சி தொண்டர்களிடையே இன்று பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மசூதி குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே, இந்த வழக்கு தொடர்பாக பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பை கோர வேண்டும்.

ராகுல் காந்தி மற்றும் பிற தலைவர்கள் சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் குற்றம்சாட்டியவர்களை கடுமையாக விமர்சித்தனர். ஆனால் நீதிமன்றம் அவர்களை விடுவித்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் கர்நாடக மக்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார். #tamilnews