நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முகுருஜா, ஷரபோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் பிரிவில் முன்னணி வீரர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 3-வது நாளில் ஜெர்மனியின் இளம் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அண்மையில் ரோஜர் பெடரை தோற்கடித்து ரோஜர்ஸ் கோப்பையை வென்றவரும், உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளவருமான ஸ்வெரேவை 61-ம் நிலை வீரர் போர்னா கோரிச் (குரோஷியா) 3-6, 7-5, 7-6 (1), 7-6 (4) என்ற செட் கணக்கில் சாய்த்தார். இந்த ஆட்டம் 3 மணி 25 நிமிடங்கள் நீடித்தது.
12-ம் நிலை வீரர் சோங்காவுக்கும் (பிரான்ஸ்) அதிர்ஷ்டம் இல்லை. அவர் 4-6, 4-6, 6-7 (3) என்ற செட் கணக்கில் 18 வயதான தகுதிநிலை வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் (கனடா) அடங்கிப்போனார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி (டென்மார்க்) 2-6, 7-6 (5), 1-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோவாவின் சவாலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்தார். 40-ம் நிலை வீராங்கனையான மகரோவா, வோஸ்னியாக்கிக்கு எதிராக 8 ஆட்டங்களில் விளையாடி அதில் பதிவு செய்த முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 10-ம் நிலை வீராங்கனை டொமினிகா சிபுல்கோவாவும் (சுலோவக்கியா) 2-வது சுற்றுடன் நடையை கட்டினார். அவரை அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-2, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
15 மாத கால தடையை அனுபவித்த பிறகு முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அடியெடுத்து வைத்திருக்கும் ரஷியாவின் மரிய ஷரபோவா 2-வது சுற்றில் 6-7 (4), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் டைமியா பபோசை வீழ்த்தினார். 12 ஏஸ் சர்வீஸ் வீசிய ஷரபோவா இந்த வெற்றியை சுவைக்க 2 மணி 19 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.
விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 6-0 என்ற நேர் செட்டில் டுவான் யிங்-யிங்கையும் (சீனா), செக்குடியரசின் பெட்ரா கிவிடோவா 6-1, 6-2 என்ற நேர் செட்டில் அலிஸி கார்னெட்டையும் (பிரான்ஸ்), முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்டில் ஓசியானி டோடினையும் (பிரான்ஸ்) பந்தாடியதுடன் 3 -வது சுற்றையும் உறுதி செய்தனர்.