பினராயி விஜயன் 
செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு - கேரள சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டம்

கேரள சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூட்டப்படுகிறது. இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கேரளாவில் ஆளும்கட்சியாக உள்ள கம்யூனிஸ்டும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் குடியுரிமை சட்டதிருத்தத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. எதிர்கட்சியான காங்கிரசும், ஆளும்கட்சியுடன் கைகோர்த்து இந்த போராட்டத்தில் பங்கேற்றது.

சமீபத்தில் கேரள கவர்னர் ஆரிப்முகமதுகான் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் மாணவர்கள் போராட்டம் நடத்திய பரபரப்பு சம்பவம் நடந்து உள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் தலைமையில் அடுத்தகட்ட போராட்டம் பற்றி ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் முஸ்லிம்லீக், இந்திய கம்யூனிஸ்டு உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் கேரள சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.