செய்திகள்

முடங்கிப் போன அமேசான் தளம், காரணம் சீன நிறுவனம்

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தால் அமேசான் இணையத்தளம் மற்றும் செயலி சிறிது நேரத்திற்கு முடங்கியது. இதற்கான காரணம் என்னவென்று தொடர்ந்து பார்ப்போம்.

புதுடெல்லி:

பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசானின் இந்திய இணையத்தளம் மற்றும் செயலி சிறிது நேரத்திற்கு முடங்கிப் போனது. தளத்தில் அதிக வியாபாரம் நடைபெறும் நேரத்தில் தளத்தின் சேவைகள் முடங்கியது அதன் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர்கள் பொருளை வாங்க முன்பதிவு செய்யும் போது, சிறிது நேரத்திற்கு பின் முயற்சி செய்யுங்கள் என்ற வாசகம் திரையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமேசானின் இணையத்தளம் மற்றும் செயலியும் சீனாவின் சியோமி நிறுவனம் நடத்திய பிளாஷ் விற்பனையால் முடங்கி போனது. சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் பிளாஷ் விற்பனை இன்று மதியம் 12.00 மணிக்கு நடைபெற்றது.  

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அமேசான் இணையத்தளம் மற்றும் செயலியை இயக்க முடியாமல் போனதை தொடர்ந்து சிலர் மட்டுமே தளத்தின் பொருட்களை பார்க்க முடிந்தது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் அமேசான் தளம் முடங்கிப் போனதும் குறிப்பிடத்தக்கது. கடந்த முறை சுமார் 2 மணி நேரம் 39 நிமிடங்களுக்கு தளம் வேலை செய்யாமல் போனது குறிப்பிடத்தக்கது.  

ரெட்மி 4 ஸ்மார்ட்போனினை அமேசான் தளத்தில் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதன் படி Mi வாடிக்கையாளர்களுக்கு ரெட்மி 4 கேஸ் ரூ.349-க்கு வழங்கப்பட்டது. இவற்றின் உண்மையான விலை ரூ.499 என்பதும் குறி்ப்பிடத்தக்கது. இதே போன்று Mi ஹெட்போன்களை ரூ.599-க்கும், Mi ஏர் கேப்சியூல் இயர்போன்களை ரூ.999க்கும் வழங்கப்பட்டது. 

இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கியின் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.500 வரை கேஷ்பேக் வழங்கப்பட்டது. முதல் பிளாஷ் விற்பனை நிறைவுற்ற நிலையில், ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் அடுத்த பிளாஷ் விற்பனை மே 30-ந்தேதி நடைபெற உள்ளது.

சியோமி ரெட்மி 4 சிறப்பம்சங்கள்:

* 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் வடிவமைப்பு

* குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 ஆக்டா கோர் பிராசஸர்

* 13 எம்பி பிரைமரி கேமரா

* 5 எம்பி செல்ஃபி கேமரா

* 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரி 

* 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

* 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

* 4100 எம்ஏஎச் பேட்டரி

* ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம்

* கைரேகை ஸ்கேனர்

* 2ஜி, 3ஜி, 4ஜி கனெக்டிவிட்டி

* டூயல் சிம் ஸ்லாட்

* மைக்ரோ யுஎஸ்பி 2.0  

* வைபை, ப்ளூடூத் 

சியோமி ரெட்மி 4 2ஜிபி ரேம், 16ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் ரூ.6,999, 3ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் ரூ.8,999 மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மாடல் ரூ.10,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.