செய்திகள்

அமர்நாத் தீவிரவாத தாக்குதல்: அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் மெகபூபா அழைப்பு

அமர்நாத் யாத்ரீகள் மீதான தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்திற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா அழைப்பு விடுத்துள்ளார். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் தாக்குதலை நடத்தியிருக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாலை மலர்

ஜம்மு:

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு தரிசனத்தையொட்டி யாத்ரீகர்களின் முதல் குழுவினர் கடந்த 28-ம் தேதி பயணத்தை தொடங்கினர்.

இதனிடையே, நேற்று இரவு அனந்தநாக் மாவட்டம் பாடிங்கு என்ற பகுதி வழியாக யாத்ரீகர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் பலியாகினர். 3 போலீசார் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தாக்குதலை தொடர்ந்து அனந்தநாத் மாவட்டத்தில் இன்று காலை முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், யாத்ரீகள் மீதான தீவிரவாத தாக்குத தொடர்பாக அமைச்சரவை கூட்டத்திற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா அழைப்பு விடுத்துள்ளார். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் தாக்குதலை நடத்தியிருக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு கவர்னர் வோஹ்ரா, முதல்வர் மெகபூபா, துணை முதல்வர் நிர்மல் சிங் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மெகபூபா, காயமடைந்து அனந்தநாக் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது துணை முதல்வர் நிர்மல் சிங்கும் உடன் இருந்தார். தாக்குதலில் தொடர்புடையவர் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் என்று மெகபூபா உறுதி அளித்தார்.

இதனிடையே, யாத்ரீகள் மீதான தீவிரவாத தாக்குத தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இல்லத்தில் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுஜ்வாலா, பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிறைய ஓட்டைகள் உள்ளதாக குற்றம்சாட்டினார். தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

உயிரிழந்தவர்களின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக இருப்பதால், அவர்களது சடலங்களை விமானத்தில் கொண்டு செல்ல அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.