செய்திகள்

பலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியது

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கிடையே அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற முதல் யாத்ரீகர்கள் குழுவை ஜம்மு-காஷ்மீர் மாநில துணை முதல் மந்திரி டாக்டர் நிர்மல்சிங் இன்று வழியனுப்பி வைத்தார்.

மாலை மலர்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

பள்ளத்தாக்கான மலைப்பாதை வழியாக பாஹல்காம் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 46 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் பல்ட்டால் பகுதியில் உள்ள மலையடிவார முகாமில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தை கடந்தும் அமர்நாத் ஆலயத்தை சென்றடைய வேண்டும்.

62-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த ஆண்டின் யாத்திரை இன்று (28-ம் தேதி) தொடங்கி 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரக்‌ஷா பந்தன் தினத்தன்று நிறைவடையும். பல்டல் மற்றும் பாஹல்காம் முகாம்களில் இருந்து மலைப்பாதை வழியாக தினந்தோறும் குழுக்களாக யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரையின்போது சுமார் 100 காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுமார் 150 முக்கிய பிரமுகர்களை கொல்லப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டலை எதிர்கொள்ளவும் அசாதாரணமான சூழ்நிலைகளை கையாளவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

35 முதல் 40 ஆயிரம் வரையிலான போலீசார் மற்றும் ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்புக்காக கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவப் படையினரையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

பல லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் குவிய உள்ளதால் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த மலையடிவாரத்தில் உள்ள ஆறு முகாம்களில் செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. இங்குள்ள ஐந்து முகாம்களின் அருகாமையில் தற்காலிக மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.


அனைத்து முகாம்களிலும் தொலைபேசி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறைகள், குளியல் அறைகள், பொது சமையல் கூடங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. யாத்ரீகர்களின் சுமைகளை ஏற்றிச் செல்ல ஆயிரக்கணக்கான கழுதைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் 2,280 யாத்ரீகர்கள் முதல் குழுவாக புறப்பட்டு சென்ற 72 வாகனங்களை ஜம்மு-காஷ்மீர் மாநில துணை முதல் மந்திரி டாக்டர் நிர்மல் சிங் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி பிரியா சேத்தி ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.