செய்திகள்

இந்த ஆண்டில் 2 லட்சம் சீன சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை: மாநிலங்களவையில் அல்போன்ஸ் தகவல்

இந்த ஆண்டில் சீனாவை சேர்ந்த 2 லட்சம் சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர் என மாநிலங்களவையில் சுற்றுலா துறை மந்திரி அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினர், குஜராத் தேர்தலின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது சுமத்தப்பட்ட விமர்சனத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் இரண்டு அவைகளும்

ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று மாநிலங்களவையில் சுற்றுலா துறை மந்திரி அல்போன்ஸ் பேசியதாவது:

டோக்லாம் பிரச்னை எழுந்த நிலையிலும் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவில்லை. இந்த ஆண்டில் 2 லட்சம் சீனர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். 2015 முதல் 2017ம் ஆண்டு வரையில் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 9.28 சதவீதம் அதிகரித்து வந்துள்ளது.

2015-ல் 2 லட்சத்து 6 ஆயிரமாக இருந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2016-ல் 2 லட்சத்து 51 ஆயிரமாக உயர்ந்துள்ளது.  அதேபோல், இந்த ஆண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் சீனர்கள் சுற்றுலா வந்துள்ளனர்.

இந்த பட்டியலில் வங்காளதேசத்தினர் 19 லட்சத்துடன் முதல் இடத்தில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து இலங்கை 3 லட்சம் பேருடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளார்.