லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. 16 மேயர் பதவிக்கான மாநகராட்சி தேர்தலில் 14-ல் பா.ஜ.க. வென்று சாதனை படைத்தது. ஆனால் மற்ற நகர அமைப்புகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
மாநகராட்சி, நகராட்சிகளில் மொத்தம் 12,644 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு 2,366 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. இது உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு இருந்த செல்வாக்கில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதை காட்டுகிறது.
2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்த போது உத்தரபிரதேசத்தில் மோடி அலை வீசியது. 16 மாநகராட்சிகளில் 48.5 சதவீதம் வாக்குகளை பா.ஜ.க. பெற்றிருந்தது. ஆனால் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த 16 மாநகராட்சிகளிலும் பாரதிய ஜனதாவுக்கு 41 சதவீத ஓட்டுக்களே கிடைத்துள்ளன. சுமார் 7 சதவீதம் வாக்குகளை மாநகராட்சி பகுதிகளில் பா.ஜ.க. இழந்துள்ளது.
மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளில் பா.ஜ.க. 2,366 இடங்களில் வென்ற போதிலும் 3,656 பேர் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர். அதாவது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர்களில் 45 சதவீதம் பேர் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.
என்றாலும் மற்ற கட்சிகளும் அதிக அளவு டெபாசிட்டை இழந்துள்ளன. சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களில் 54 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களில் 66 சதவீதம் பேரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
மிக அதிகபட்சமாக காங்கிரஸ் வேட்பாளர்களில் 75 சதவீதம் பேர் டெபாசிட்டை பறிகொடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பா.ஜ.க. எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் மொத்த வாக்குகள் பெற்றதில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அதாவது மொத்த வாக்குகளில் 30.8 சதவீத வாக்குகளை பா.ஜ.க. பெற்றுள்ளது.
சமாஜ்வாடி கட்சிக்கு 18 சதவீதம், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 14.3 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 10 சதவீதம் வாக்குகளே கிடைத்துள்ளன.
காங்கிரசை விட பா.ஜ.க. கூடுதலாக 21 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்கிறது.