புதுடெல்லி:
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவிக்லைனில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்தில் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் பங்கேற்றார்.
கூட்டத்தின் போது வார்த்தைகள் மோதலால் தலைமை செயலாளரை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாக தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை நேரில் சந்தித்து புகார் கொடுத்தார்.
எம்.எல்.ஏ.க்கள் அஜத்தத், பிரகாஷ் ஜார்வால் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கவர்னரிடம் வலியுறுத்தி உள்ளார்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவித்தது. வங்கி ஊழல்களை மறைக்க மத்திய அரசு நடத்தும் நாடகம் இது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
ஆதார் பிரச்சினை காரணமாக டெல்லியில் 2½ லட்சம் குடும்பங்களுக்கு கடந்த ஜனவரியில் ரேசன் பொருட்கள் வழங்கப் படவில்லை. அதற்கான காரணத்தை கேட்டோம். அதற்கு பதில் அளிக்க தலைமை செயலாளர் மறுத்துவிட்டார்.
அவரிடம் கேள்வி எழுப்பிய சில எம்.எல்.ஏ.க்களின் சாதியை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளால் அவமானப்படுத்தினார். ஆலோசனை கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து விட்டு வெளியேறி விட்டார். பா.ஜ.க துண்டுதலின் பேரில் தலைமை செயலாளர் செயல்படுகிறார். ஆம் ஆத்மி அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது எனவும் ஆம் ஆத்மி கூறியுள்ளது.
இதற்கிடையே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தாக்கியது தொடர்பாக தலைமை செயலாளர் டெல்லி சிவில் லைன்ஸ் போலீசில் புகார் அளித்து இருந்தார்.
போலீசில் சரணடைய வந்த எம்.எல்.ஏ
இந்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வாலை கைது செய்தனர். தெற்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நள்ளிரவில் கைது செய்தனர். இதே போல அமானத்துல்லா கான் எம்.எல்.ஏ. ஜாமியா நகர் காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார்.
தான் எந்த தவறு செய்யவில்லை என அமானத்துல்லா கான் தெரிவித்தார். #DelhiChiefSecretary #TamilNews