புதுடெல்லி:
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் நிறுவனம் முந்தைய 2013-14-ம் நிதி ஆண்டில் 80 கோடி ரூபாய் லாபம் ஈட்டி இருந்தது. ஆனால், 2015-16-ம் நிதி ஆண்டில் அந்த தொகையைவிட 16 ஆயிரம் மடங்கு லாபத்தை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது என தனியார் செய்தி இணையதள ஊடகம் ஒன்றில் செய்திகள் வெளியானது.
இவ்விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், இந்த செய்தியை மறுத்த பா.ஜ.க சம்பந்தப்பட்ட இணையதள ஆசிரியர் மற்றும் நிர்வாகி மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என மத்திய மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய அந்த செய்தியை வெளியிட்ட இணையதள ஊடக ஆசிரியர், உரிமையாளர், கட்டுரையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது அகமதாபாத் நீதிமன்றத்தில் அமித்ஷா மகன் ஜெய்ஷா நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷாவின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்ததாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதுமில்லை என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் புதிய தலைமை அலுவலக கட்டித்தை இன்று திறந்து வைத்த ராஜ்நாத் சிங், இதுதொடர்பான நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், ‘காலகாலமாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இதில் ஆதாரம் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.