புதுச்சேரி:
மத்திய பா.ஜனதா அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
புதுவையில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலை நிறுத்தத்துடன் பந்த் போராட்டமும் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எல்.எல்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., அரசு ஊழியர் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் வருகிற 8-ந் தேதி புதுவையில் பந்த் போராட்டம் நடக்கிறது.
பந்த் போராட்டம் தொடர்பாக ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த செப்டம்பர் 30-ந் தேதி டெல்லி நாடாளுமன்ற சாலையில் தொழிலாளர் மாநாடு நடந்தது. மாநாட்டில் மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோதம், தேச விரோத கொள்கைகளை கண்டித்து ஜனவரி 8-ந் தேதி பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும், அரசு ஊழியர் சம்மேளனமும் இணைந்து பொது வேலைநிறுத்தத்தை பந்த் போராட்டமாக நடத்த முடிவு செய்துள்ளோம். குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும். குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். குடிமக்கள் பதிவேடு திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.
போராட்டத்துக்கு பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள், மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் ஆதரவு கோரி உள்ளோம். பொது மக்களும் போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது ஏ.ஐ.டி. யூ.சி. தலைவர் தினேஷ் பொன்னையா, ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ஞான சேகரன், சி.ஐ.டி.யூ. முருகன், சீனுவாசன், தொ.மு.ச. முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, அன்பழகன், அண்ணா அடைக்கலம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மோதிலால், புருஷோத்தமன், எல்.எல்.எப். செந்தில், எம்.எல்.எப். வேதாவேணுகோபால், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. சங்கரன், அரசு ஊழியர் சம்மேளனம் பிரேமதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.