புதுச்சேரி:
புதுவையில் புகழ்வாய்ந்த ஜிப்மர் மருத்துவக்கல்லூரி உள்ளது. இதில் புதுவையில் உள்ள கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 150 இடங்களும், காரைக்கால் கல்லூரியில் 50 இடங்களும் உள்ளன. இந்த 200 இடங்களில் புதுவை மாநில மாணவர்களுக்காக மட்டும் 54 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த கல்லூரியில் சேர கடந்த 4-ந்தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு 9-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவுகள் அடிப்படையில் கடந்த 28-ந்தேதி தொடங்கி கலந்தாய்வு நடந்து வந்தது. நேற்று புதுவை மாநில மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது.
இந்த கலந்தாய்வுக்கு பொதுப்பிரிவில் 300 மாணவர்களும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 160 மாணவர்களும், 77 மாணவர்கள் தாழ்த்தப்பட்டோர் பிரிவிலும், அயல்நாடுவாழ் இந்தியருக்கான இடஒதுக்கீட்டிற்கு 60 மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
3 நாட்கள் நடந்த கலந்தாய்வின் முடிவில் நேற்று ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. இதில் காலியிடங்கள் உருவாகும்பட்சத்தில் 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 19-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.