திருச்சியில் இன்று மாலை நடைபெறவுள்ள அனைத்து கட்சி பொதுக்கூட்டத்திற்காக தயாராகி வரும் மேடையை படத்தில் காணலாம். 
செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: திருச்சியில் இன்று அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம்

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி திருச்சியில் இன்று அனைத்து கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் மு.க.ஸ்டாலின் உள்பட 8 கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

மாலை மலர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணவி அனிதா. இவர் பிளஸ்-2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவம் படிக்க வேண்டும் என்று லட்சிய கனவுடன் இருந்த அவர் நீட் தேர்வால் அந்த வாய்ப்பை இழந்தார்.

இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1-ந்தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அனைத்து இடங்களிலும் போராட்டமும் வெடித்துள்ளது.

இதற்கிடையே குழுமூர் வந்த மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறினார். அதன்படி நடந்த கூட்டத்தில் மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் செப்டம்பர் 8-ந்தேதி அனைத்து கட்சி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் இன்று மாலை 5 மணி அளவில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என். நேரு. எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார்.

பொதுக்கூட்டம் நடைபெறும் உழவர்சந்தை திடலில் சேர்கள் போடப்பட்டு வரும் காட்சி.