போலீசாரை அருள்பாண்டியன் , இளங்கோவன் ஆகியோர் தாக்கிய காட்சி. 
செய்திகள்

தேடுதல் வேட்டைக்கு சென்றபோது போலீசாரை தாக்கி கையை கடித்த சாராய வியாபாரிகள்

திருவோணம் அருகே தேடுதல் வேட்டைக்கு சென்றபோது போலீசாரை தாக்கி கையை கடித்துவிட்டு தப்பி சென்ற சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

மாலை மலர்

திருவோணம்:

திருவோணம் அடுத்த புதுவிடுதியில் உள்ள ஒரு மறைவான இடத்தில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக பட்டுகோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அமலாக்கபிரிவு ஏட்டு செந்தில்குமார், காவலர் ஆல்வின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு சாராயம் காய்ச்சிய ராஜூவை போலீசார் கைது செய்தனர். அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் புதுவிடுதியில் ஒரு மறைவான இடத்தில் அருள்பாண்டியன், இளங்கோவன் இருப்பதாக வந்த தகவலின்பேரில் ஏட்டு செந்தில்குமார், காவலர் ஆல்வின் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது அருள்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் திடீரென உருட்டு கட்டையால் போலீசாரை தாக்கி கையை கடித்துவிட்டு மீண்டும் தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் போலீசார் செந்தில்குமார், காவலர் ஆல்வின் ஆகிய 2 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பட்டுகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து திருவோணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்பாண்டியன், இளங்கோவனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.