கொலை 
செய்திகள்

திருத்தங்கலில் மது குடித்தபோது தகராறு- ரவுடி வெட்டிக்கொலை

மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் ரவுடி கல்லால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

மாலை மலர்

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் பொங்கல் என்ற முத்துக்குமார் (வயது 25), பிரபல ரவுடி. இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. முத்துக்குமார் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தான் எப்போதும் சுற்றி வருவார் என கூறப்படுகிறது. நேற்று அவர், தனது நண்பர்கள் கண்ணன், சுந்தரபூபதி, குமார், பாலகிருஷ்ணன், தீபக்குமாருடன் சேர்ந்து மது அருந்தினார்.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுக் கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் முத்துக்குமார் உள்பட 6 பேரும், முத்துமாரி காலனியில் உள்ள வண்ணங்குளம் பகுதியில் அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. முத்துக்குமார் கருத்தை மற்ற 5 பேரும் ஏற்கவில்லை. இது மோதலாக மாற 5 பேரும் சேர்ந்து அரிவாளால் முத்துக்குமாரை வெட்டினர்.

மேலும் கல்லாலும் தாக்கி உள்ளனர். இதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கொலை குறித்து தகவல் கிடைத்ததும் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் கண்ணன், சுந்தரபூபதி, குமார், பாலகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.